மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 85 பெண்கள் உள்பட 2,536 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 85 பெண்கள் உள்பட 2,536 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி வணிகர் சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது.
ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்ததால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமான பணிகளை மேற்கொண்டவர்கள் மட்டுமே சாலைகளில் சென்றதை காண முடிந்தது. மாவட்டத்தில் பஸ்கள் போதிய அளவு இயக்கப்பட்டதால் பொதுமக்களின் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் வழக்கம்போல தங்களின் பணிகளை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.
ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமையில் தி.மு.க.வினரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் அக்கட்சியினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, துணை தலைவர் சாதுல்லாகான் உள்ளிட்டோரும், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியினரும், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி உள்ளிட்டோர் அரண்மனை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் பஸ் மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் 12 பெண்கள் உள்பட 610 பேரை கைது செய்தனர்.
முதுகுளத்தூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், பூபதிமணி ஆகியோர் தலைமையில் 220-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல கடலாடியில் தேவர் சிலை அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் மறியல் செய்ய முயன்ற மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி உள்பட 215 பேரை கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது 85 பெண்கள் உள்பட 2,536 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story