மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,200 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சாலை, ரெயில் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் உள்பட 3 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் நேற்று தி.மு.க.கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.இதனையொட்டி வேலூர் மாநகரில் காட்பாடி சாலை, பெங்களூரு சாலை, கிருபானந்தவாரியார் சாலை, ஆரணி சாலை, நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வேலூர் மாநகரில் 90 சதவீத கடைகள் திறக்கப்படவில்லை. கடையடைப்பு காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வீதிகளும் வெறிச்சோடியன.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஞானவேலு கூறுகையில், ‘முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் மாவட்டத்தில் சுமார் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது’ என்றார்.
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமசந்திரன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், லோகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.இதேபோல் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். வேலூர் சங்கரன்பாளையத்தில் இருந்து பாகாயம் நோக்கி தி.மு.க.வினர் கட்சி கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். அப்போது அப்பகுதியில் திறந்து இருந்த கடைகளை மூடும்படி வலியுறுத்தினார்கள். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பஸ்கள் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டேரி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஓட்டேரி பஸ் நிறுத்தத்துக்கு ஊர்வலமாக வந்த தி.மு.க.வினரை பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அந்த சமயம் அவ்வழியாக வந்த மாவட்ட கலெக்டர் ராமன் அப்பகுதி சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதேபோல் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வேலூர் டவுன் ரெயில் நிலையத்தில் மறியல் நடந்தது
வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு, ஆம்பூர், சோளிங்கர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, அரக்கோணம், குடியாத்தம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் நடந்த ரெயில், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் உள்பட 3 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். கடையடைப்பு, ரெயில், சாலை மறியல் காரணமாக மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.