காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு
x
தினத்தந்தி 5 April 2018 11:15 PM GMT (Updated: 5 April 2018 11:10 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு, சாலை மறியல் நடந்தது.

ஆறுமுகநேரி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஆத்தூர், பழையகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் தி.மு.க. முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் காளிதாஸ் பண்ணையார், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுயம்புலிங்கம், பாலமுருகன், நகர செயலாளர்கள் பார்த்தீபன் உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 166 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆத்தூரில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 18 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர். காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. பிரமுகர் முத்து முகமது தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் 92 பேரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.

உடன்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. உடன்குடி மெயின் பஜார் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறி யலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசிங், நகர செயலாளர் ஜான் பாஸ்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், ம.தி.மு.க. நகர செயலாளர் அந்தோணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 95 பேரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் பெருமாள், வக்கீல் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 39 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பார்த்தீபன், நகர செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 73 பேரை ஆழ்வார்திருநகரி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குரும்பூர் மெயின் ரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் ராமஜெயம் (தென்திருப்பேரை) உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 48 பேரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேலாயுதபெருமாள், சின்னமாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, தவசி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் வசந்தம் ஜெயகுமார், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன், மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு தலைவர் பெத்துராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 123 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், நகர செயலாளர் பாரதி கணேசன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 38 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Next Story