காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் தபால் நிலையத்துக்கு பூட்டுப்போட முயற்சி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் தபால் நிலையத்துக்கு பூட்டுப்போட முயற்சி
x
தினத்தந்தி 6 April 2018 10:00 PM GMT (Updated: 6 April 2018 7:08 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் தபால் நிலையத்துக்கு பூட்டுப்போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாகையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தபால் நிலையம் முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தபால் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு தபால் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் தங்கள் கொண்டு வந்த சங்கிலி மற்றும் பூட்டை தடுப்பு கம்பியில் போட்டு பூட்ட முயன்றனர். உடனே போலீசார் சங்கிலியை பறித்தனர்.

இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தபால் நிலையத்துக்கு பூட்டுப்போட முயன்ற மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை வேனில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story