கோவை சிங்காநல்லூரில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


கோவை சிங்காநல்லூரில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 6 April 2018 9:45 PM GMT (Updated: 6 April 2018 8:19 PM GMT)

கோவை சிங்காநல்லூரில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு தொடர்பிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிட்டிபாபு(வயது 44). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 4–ந் தேதி நள்ளிரவில் ஒண்டிப்புதூர்–இருகூர் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள. கொலை செய்யப்பட்ட சிட்டிபாபுவுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். தாய் பழனியம்மாளுடன் சிட்டிபாபு வசித்து வந்தார்.

சம்பத்தன்று இரவு சிட்டிபாபு செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே வெளியே சென்ற அவர் சிறிது நேரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிட்டிபாபுவின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் போலீசாருக்கு சில ரகசிய தகவல் கிடைத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதியில் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு சிட்டிபாபு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிட்டிப்பாபுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் சிட்டிபாபு கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கொலை வழக்கில் 4 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் கொலை நடப்பதற்கு முன்பு சிட்டிபாபுவின் செல்போனுக்கு கடைசியாக பேசியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனவே அவர் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மற்ற கொலையாளிகளையும் போலீசார் விரைவில் கைது செய்யவார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சிட்டிபாபு கொலை வழக்கில் கண்ணன் என்பவர் உள்பட 4 பேருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் சிக்கியுள்ளார். அவர் மூலம் மற்றவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக தான் இந்த கொலை நடந்துள்ளது. வேறு காரணம் எதுவும் இல்லை. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்கள் 4 பேரையும் விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story