ஜெயங்கொண்டத்தில் இறந்த மூதாட்டியின் உடல் தானம்
ஜெயங்கொண்டத்தில் இறந்த மூதாட்டியின் உடல் புதுச்சேரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள்(வயது 83). வயது முதிர்வின் காரணமாக இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவருடைய மகன் சண்முகத்திடம், தான் இறந்த பின்னர் தன்னுடைய கண்கள் மற்றும் உடலை தானமாக வழங்கிவிடும்படி, கேட்டுக்கொண்டார்.
மேலும் ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கம் மூலம் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதற்காக பதிவு செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சரஸ்வதியம்மாள் இறந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் மாலை சரஸ்வதியம்மாளின் கண்களையும், நேற்று மதியம் அவருடைய உடலையும், தானமாக பெற்று, கொண்டு சென்றனர்.
மண்ணில் புதைத்து வீணாகும் கண்களை, வாழும் இருவருக்கு பொருத்தி பார்வை பெற கண்களையும், மருத்துவம் பயிலும் மாணவர்கள் உடல் உறுப்புகள் குறித்து நேரில் பார்த்து, கல்வி பயின்று பயன்பெறும் வகையில் உடலையும் மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய சரஸ்வதியம்மாளின் குடும்பத்தினரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story