துவரங்குறிச்சி அருகே விஷம் கலந்த மதுபாட்டிலை திருடி குடித்த தொழிலாளி பரிதாப சாவு


துவரங்குறிச்சி அருகே விஷம் கலந்த மதுபாட்டிலை திருடி குடித்த தொழிலாளி பரிதாப சாவு
x
தினத்தந்தி 7 April 2018 5:26 AM IST (Updated: 7 April 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

விஷம் கலந்த மதுபாட்டிலை திருடி குடித்த தொழிலாளி பரிதாப சாவு, பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

துவரங்குறிச்சி,

துவரங்குறிச்சி அருகே விஷம் கலந்த மதுபாட்டிலை திருடி குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மதுவை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னழகன் (வயது 39). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த தீபன் (32) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண்ணுக்குள் மதுபாட்டில்கள் புதைத்து வைத்திருப்பதை அறிந்து, அதில் 2 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

தொடர்ந்து அந்த மதுபாட்டிலில் ஒன்றை எடுத்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். பாதி அளவு மதுவை குடித்ததும் வாந்தி எடுத்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இந்நிலையில் சின்னழகன் மது குடித்ததால் தான் இறந்து விட்டார். எனவே அது எரிசாராயமாக இருக்கலாம் என கிராமத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் சின்னழகனின் வீட்டிற்கு சென்று, மீதம் இருந்த மதுவை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, அதில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, கோட்டைப்பட்டியில் இருந்து சின்னழகன் மதுபாட்டில்களை திருடி வந்ததும், அந்த மதுபாட்டிலில் பருந்தி செடிக்கு பயன்படுத்தப்படும் விஷம் கலந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தீபனை பிடித்து விசாரணை நடத்தியதில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:- தீபன் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளதால், வீட்டில் வைத்து மதுவிற்காமல் கஞ்சநாயக்கன்பட்டி அருகே வடக்கு எல்லைக்காட்டுப்பட்டியில் உள்ள தோட்டத்தில் 2 பாட்டில்கள் வீதம் தனித் தனியாக மண்ணில் புதைத்து வைத்து, யாராவது கேட்கும்போது, அதை தோண்டி எடுத்து விற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பாட்டிலில் 2 பாட்டில்கள் மட்டும் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததை அறிந்த தீபன், அதை கண்டுபிடிக்க பல நாட்கள் தோட்டத்தில் தங்கியிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தீபன் மதுபாட்டிலின் மூடியை திறக்காமல் ஊசி மூலம் மூடியின் மேல்துளையிட்டு மதுவில் விஷத்தை கலந்துவைத்துள்ளார். இதனால் தான் அந்த விஷம் கலந்த மதுபாட்டிலை திருடிச்சென்று குடித்த சின்னழகன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கூறினர். இதையடுத்து தீபன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பல்வேறு இடங்களிலும் சட்டவிரோதமாக இதுபோன்று வீட்டில், கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஆகவே தான் இதுபோன்ற உயிரிழப்பை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதுடன், சிறுவர்கள் எல்லாம் குடித்து விட்டு வாழ்வை சீரழிக்கும் நிலை உள்ளதால், இதுபோன்று சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story