சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட பழைய நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட பழைய நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர்,
தமிழகத்தின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக மேட்டூர் அணை விளங்குகிறது. கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மூலம் பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெறுகிறது. அணை கட்டப்பட்ட சில ஆண்டுகள் கழித்து மேட்டூரில் தொடங்கப்பட்ட சில தனியார் தொழிற்சாலைகள் தண்ணீர் தேவைக்காக மேட்டூர் அணையின் இடதுகரையில் உள்பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து தனியார் தொழிற்சாலைகள் அணையின் உள்பகுதியில் நீரேற்று நிலையம் அமைத்து தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொண்டன. இந்த நிலையில் சேலம் நகராட்சியாக இருந்த காலக்கட்டத்தில் நகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீரை வழங்க முடிவு செய்தது. இதற்காக பொதுப்பணித்துறை அனுமதி பெற்று, அணையின் உள்பகுதியில் சேலம் நகராட்சி சார்பாக 1952-ம் ஆண்டு ‘ராமன் டவர்‘ என்ற நீரேற்று நிலையத்தை அமைத்தது.
இந்த நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத மோட்டார்கள் மூலம் அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இந்த நீரேற்று நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 22 எம்.எல்.டி. (1 எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இதையடுத்து குழாய்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு சேலம் நகர மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. இதற்காக இந்த நீரேற்று நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் குடிநீர் தேவையும் அதிகமானது. இதன் காரணமாக சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் வெளியேறும் காவிரி ஆற்றின் கரையில் தொட்டில்பட்டி என்ற இடத்தில் புதிதாக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீரேற்று நிலையம் மூலம் ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதையடுத்து இந்த தண்ணீர் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 155 எம்.எல்.டி. தண்ணீர் இந்த நீரேற்று நிலையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சேலம் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு நாள் ஒன்று 110 முதல் 120 எம்.எல்.டி. வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே இந்த நீரேற்று நிலையம் மூலமே சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமன் டவர் என்ற பழைய நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 66 ஆண்டுகளாக 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, குறைந்த அளவிலான பணியாளர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வந்த போது, மாநகராட்சிக்கு மின் கட்டணம், பணியாளர்களுக்கு ஊதியம் என கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு நீரேற்று நிலையம் மட்டும் இயங்குவதால், செலவுத்தொகை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story