கல்வியில் முதன்மை மாவட்டமாக கரூரை மாற்ற நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


கல்வியில் முதன்மை மாவட்டமாக கரூரை மாற்ற நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

கல்வியில் முதன்மை மாவட்டமாக கரூரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

பள்ளிக்கல்வி துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி, ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் அட்லஸ் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கக்கூடிய தருணத்தில் உள்ளர்கள். இதில் சரியான பாதையை மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு தான் அதிகமாக ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் 8 இடத்தில் மட்டும் தான் உள்ளது. இதனை வருகிற ஆண்டில் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை கல்வியில் முதன்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறைக்கு தேவையான பொருட்களை அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும் தனியார் நிறுவனத்திடம் கரூர் மாவட்டத்தை கல்வி பணிக்காக தத்தெடுத்துக்கொள்ள கேட்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் டிரைவர், கண்டக்டர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க உதவிகள் செய்யப்படும். மேலும் கல்வியின் தரமும் உயர்த்தப்படும். ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அதிகப்படுத்தப்படும்.

தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இங்கு அதிக அளவில் படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களும் வெற்றி பெற்று மற்ற மாநிலங்களில் பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். ஆசிரியர்களை மாணவ- மாணவிகள் மதிக்க வேண்டும். உயர்நிலைக்கு சென்றாலும் ஆசிரியர்களை மறக்கக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி பெறும் 108 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இதில் தமிழ் வழியில் பயிலும் 45 மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்காக திண்டுக்கல் செல்கின்றனர்.

நிகழ்ச்சியில் கொங்கு கல்லூரி சார்பில் போட்டித்தேர்வு மற்றும் ‘நீட்’ தேர்வுக்கான புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சென்னை சரக்கு-சேவை வரி மற்றும் மத்திய அரசின் கலால் துணை ஆணையர் அருண்பிரசாத், புளூம்ஸ் அகாடமியை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் உயர்கல்வி தொடர்பாக பேசினர். நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் சிவசாமி, நெடுஞ்செழியன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் நன்றி கூறினார்.

இதனைதொடர்ந்து கரூர் காந்திகிராமம் அருகே சணப்பிரட்டியில் ரூ.229 கோடியே 46 லட்சம் செலவில் நடந்து வரும் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அடுத்த (2019) கல்வி ஆண்டு முதல் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும் என அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார். அதன்பின் கரூர் நகராட்சி பகுதியில் வறட்சி காலத்தை கருத்தில் கொண்டு சீரான குடிநீர் வழங்குவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார். 

Next Story