போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.72 லட்சம் கடன் வாங்கி மோசடி
போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.72 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த 2 தம்பதிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர் அருகே அரியூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 34). இவரது மனைவி அருணா (28). ஊசூரை சேர்ந்தவர் தொல்காப்பியன் (45), இவரது மனைவி சங்கீதா (38). அத்தியூரை சேர்ந்தவர் ஆனந்தன் (40) ஆகிய 5 பேர் கடந்த 2016–ம் ஆண்டு பாகாயம் ஓட்டேரியில் உள்ள ஒரு வங்கியில் பல்வேறு கடன்களுக்காக விண்ணப்பித்தனர். அதற்காக அவர்கள் பல்வேறு சொத்துகள் தங்கள் பெயரில் உள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் சமர்ப்பித்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் ரூ.72 லட்சம் வரை அந்த வங்கியில் கடன் பெற்று, சில தவணைகள் வட்டி கட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் வாங்கிய கடனை செலுத்தவில்லை. அவர்கள் வங்கியில் கொடுத்த ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளர் சுதாகர்ராவ் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் புகார் செய்தார். இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், அருணா, தொல்காப்பியன், சங்கீதா, ஆனந்தன் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், இவர்கள் அனைவரும் ஒரு கும்பலாக பல்வேறு வங்கிகளில் இதுபோன்று மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து நாங்கள் மேல் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story