காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சோமரசம்பேட்டை அருகே விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டை அருகே இனாம்புலியூர் வழியாக செல்லும் பழைய மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில், தண்ணீர் வந்து கொண்டிருந்தபோது விவசாயிகள், பல்வேறு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் காலங்களில் இப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இந்நிலையை கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்்்கக்கோரியும் திருச்சி மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த இனாம்புலியூர், சேப்ளாப்பட்டி, நெய்தலூர் காலனி, முதலைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் டிராக்டர்களில் கருப்பு துணிகளை கட்டிக் கொண்டு இனாம்புலியூர் கள்ளுக்கடை பாலம் அருகில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் தோகைமலை டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் அய்யர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாய்க்காலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கையில் கோரிக்கைகள் தொடர்பான பதாகைகளை பிடித்துக்கொண்டும், கருப்பு துணிகளை பிடித்த படியும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பெண்கள் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story