பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு


பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 9 April 2018 4:45 AM IST (Updated: 9 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். இரவு பயணத்தை தஞ்சை மாவட்டம் கல்லணையில் நிறைவு செய்தார். நேற்று 2-வது நாள் பயணத்தை தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் இருந்து தொடங்கினார்.

தொடர்ந்து அவர் காசவளநாடுபுதூர், கோவிலூர்பாலம், கா.தெக்கூர்பாலம், நாட்டரசன்கோட்டை பாலம், ஈச்சங்கோட்டை பாலம், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை பாலம், முதலிப்பட்டிபாலம், கருக்காடிப்பட்டி பாலம், வெட்டிக்காடு பாலம், சில்லத்தூர் (விவசாயிகள் சந்திப்பு), அக்கறை வட்டம், ஊரணிபுரம், நம்பிவயல், ஏனாதி, ஆலடிக்குமுளை வழியாக பட்டுக்கோட்டை சென்றார்.

முன்னதாக திருவோணத்தை அடுத்த வெட்டிக்காடு கிராமத்தில் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி தரிசாக கிடந்த நிலத்தை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விவசாய சங்க தலைவர் திருச்சி அய்யாக்கண்ணு ஆகியோரும் உடன் சென்றனர்.

சில்லத்தூரில் விவசாயிகள், கிராம மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரிக்காக நடைபெற்ற போராட்டத்தின் போது, தடை செய்யப்பட்ட இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம். நியாயமாக எங்களை சிறையில் அடைத்திருக்க வேண்டும். அதற்காகவே அந்த இடத்தில் நாங்கள் மறியல் செய்தோம். ஆனால், எங்களை அடைத்து வைக்க சிறையில் இடமில்லை என்ற காரணத்தால், மாலையில் எங்களை விடுதலை செய்தனர். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அவர்களை அடைக்க இடமில்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் பிறகு, என் மீதும் எல்லா கட்சிகளின் தலைவர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை எல்லாம் பார்த்து நாங்கள் அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி விடப்போவதில்லை. இந்த வழக்குகளால், ஒரு மாதம் இரண்டு மாதம் ஒரு வருடம் மட்டுமல்ல, காவிரிக்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனைத்தொடர்ந்து, காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இப்போது நடத்துகிறோம்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இந்தப் பயணத்தை தொடங்கி, இரவு கல்லணையில் முடித்தோம். இன்று (நேற்று) தஞ்சையில் தொடங்கி உள்ளோம். இந்த மீட்பு பயணத்தில் திருச்சி எந்தளவு எழுச்சியாக, உணர்ச்சிகரமாக இருந்தது, மக்கள் எந்தளவுக்கு திரண்டு, எங்களுடைய பயணத்துக்கு வரவேற்பளித்தனர் என்பது குறித்து தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, நாளை தஞ்சைக்கு செல்கிறோமே, எப்படியிருக்கும் என்று சிலர் கேட்டனர். “நிச்சயம் திருச்சியை தஞ்சை வெல்லும், காரணம் இது தலைவர் கலைஞர் பிறந்த மண்”, என்று தெரிவித்தேன்.

எனவே, இந்த மண்ணின் மைந்தனாக உங்களிடத்தில் உரையாற்றுகிறேன். இந்தப் பயணம் கிளம்புவதற்கு முன்பாக, தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற சென்றேன். பயண விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்தபோது, அவர் எனது கையை பிடித்துக் குலுக்கினார். அவரால் பேச முடியாது. காரணம், உடல் நலிவுற்று இருக்கின்றார். அவருடைய தொண்டையில் துளையிட்டு, குழாய் வழியாக உணவு வழங்கப்படுகிறது. சுவாசமும் அதன் வழியாகவே நடைபெறுகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட காவிரி உரிமை மீட்புப் பயணம் செல்கிறேன் என்றதும், எனது கையை பிடித்துக் குலுக்கி, என்னைப் பார்த்து சிரித்தார். “என்னை வாழ்த்துங்கள் அப்பா”, என்று நான் கேட்டதும், எனது தலையில் கையை வைத்து வாழ்த்தினார்.

ஏனென்றால், காவிரி பிரச்சினை என்றதும், உடல் நலிவுற்ற நிலையிலும் தன்னையும் அறியாமல், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்று சொல்வதுபோல, தலைவர் கருணாநிதி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். எனவே, அவருடைய வாழ்த்துகளுடன் இந்தப் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நடக்கும் இந்தப் பயணத்தில், நீங்கள் எல்லாம் இங்கு கட்டுப்பாட்டுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அனைத்து கட்சி கூட்டத்தில் இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் நேரத்தில், அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். வருகிற 12-ந்தேதி பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவதாக தெரிய வந்திருக்கிறது. நம் கருப்புக்கொடி காட்டுவதால், ஒருவேளை சாலையில் வராமல், விமானம் மூலம் மேலேயே பறந்து வந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அப்படியே திரும்புவதாகவும் செய்தி வந்திருக்கிறது. எது எப்படி நடந்தாலும், நாங்கள் அறிவித்தபடி கருப்புக்கொடி காட்டுவது உறுதி.

இன்று காலையில் அனைத்து கட்சி தலைவர்களிடம் பேசியபோது, நாங்கள் முடிவெடுத்தபடி, பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவது மட்டுமல்ல, அவர் வரும் நாளில் அனைவரும் கருப்பு உடையணிந்து நம்முடைய வேதனையை, கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி வைக்க வேண்டும். எனவே, அவர் வரும் நாள் உறுதியாக தெரியவந்ததும், அனைத்து கட்சிகளின் சார்பில் நாங்கள் அறிக்கை வெளியிடுவோம். அதன்படி, நீங்கள் அனைவரும் கருப்பு உடையணிந்து, உங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, உங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் சூரப்பள்ளம், செண்டாங்காடு, திட்டக்குடி, செம்பாலூர், ஆலத்தூர், முள்ளூர்பட்டிக்காடு, கண்ணுக்குடி கிழக்கு, கண்ணுக்குடி மேற்கு, தொண்டராம்பட்டு, திருமங்கலக்கோட்டை மேற்கு, அருமுளை, ஒக்கநாடு கீழையூர், கீழவன்னிப்பட்டு, ஒக்கநாடு மேலையூர், சூலமங்கலம், தாந்தோணி, தலையாமங்கலம், சின்னபொன்னாப்பூர், மூர்த்தியம்பாள்புரம், சடையார்கோவில் வழியாக வாண்டையார் இருப்பை வந்தடைந்தார். இரவு தஞ்சையில் தங்கினார்.

இன்று (திங்கட்கிழமை) தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து 3-வது நாள் பயணத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் இரவு திருவாரூர் மாவட்டமான நீடாமங்கலத்தில் பயணத்தை நிறைவு செய்கிறார். 

Next Story