மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து முழுவடை விவசாய பணிகள் தீவிரம்


மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து முழுவடை விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 April 2018 5:02 AM IST (Updated: 9 April 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதி நிலங்களில் முழுவடை விவசாயிகள் தற்காலிக முகாம்கள் அமைத்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொளத்தூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளான பண்ணவாடி, சேத்துக்குளி, மூலக்காடு ஆகிய இடங்களில் முழுவடை விவசாயம் நடைபெறுவது வழக்கம். முழுவடை விவசாயம் மூலம் தொடக்கத்தில் கம்பு, ராகி, சோளம் போன்ற தானியப் பயிர்களை பயிரிட்டு வந்த விவசாயிகள் படிப்படியாக புகையிலை, பருத்தி போன்ற பணப்பயிர்களையும், தர்பூசணி, காலிபிளவர் போன்ற காய்கறி பயிர்களையும் பயிரிட தொடங்கி உள்ளனர்.

தற்போது மூலக்காடு நீர்தேக்கப்பகுதிகளில் அதிக இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் விவசாயிகள் மக்கா சோளம் பயிரிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பயிர்கள் விளைவிக்கப்பட்ட நிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை நாசமாக்கி வருகின்றன. எனவே காட்டு பன்றிகளை விரட்ட முழுவடை விவசாயிகள் நீர்தேக்கப்பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் நடப்பாண்டில் முழுவடை பாசனம் மூலம் முப்போக சாகுபடி செய்ய முழுவடை விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் குறுகிய கால பயிர்களை பயிரிடுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். முழுவடை விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடிக்காக நீர்தேக்கப் பகுதிகளில் தற்காலிக முகாம் அமைத்து தங்களது வளர்ப்பு கால்நடைகளுடன் தங்கியுள்ளனர்.

Next Story