மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

எஸ்.சி., எஸ்.டி., ஆதிதிராவிட மக்களுக்கான சட்ட உரிமைகளை நீர்த்துப்போகச்செய்யக்கூடிய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் பேசியதாவது:- முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு எஸ்.சி., எஸ்.டி., ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக வன்கொடுமை சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் உதவியால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்று வந்தனர். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை தாக்குதல் குறைந்து சமூகத்தில் அமைதி நிலவியது.

இந்த நிலையில் வன்கொடுமை சட்டம் குறித்து ஒரு பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தபோது இந்த சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை பாதிக்கும் வகையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்து சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர அறிவுறுத்தி உள்ளனர்.

அவ்வாறு மாற்றங்கள் செய்தால் இந்த சட்டம் நீர்த்துப்போக வாய்ப்பு உள்ளது. மீண்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைகள், சுதந்திரம் இதன்மூலம் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சட்டத்தில் மாற்றங்களை செய்யக்கூடாது, சட்ட விதிகளை தளர்த்தக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியும், இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் சமூக அமைதி, மதநல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே வன்கொடுமை சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் சாயல்குடி வேலுச்சாமி, விக்டர், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெ.ஆலம், மாவட்ட துணை தலைவர் துல்கிப், நகர் தலைவர் கோபி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டி, ராமேசுவரம் ராஜாமணி, இளைஞர் காங்கிரஸ் சரவணகாந்தி, சேவாதள தலைவர் காருகுடி சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், தீப்பொறி கருணாகரன், எஸ்.சி., எஸ்.டி. பிரம்மநாதன், மகளிர் காங்கிரஸ் சகுந்தலா, முனீசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story