வங்கியில் கல்வி கடன் வழங்காததால் பூச்சி மருந்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தந்தை - மகன்


வங்கியில் கல்வி கடன் வழங்காததால் பூச்சி மருந்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தந்தை - மகன்
x
தினத்தந்தி 10 April 2018 4:30 AM IST (Updated: 10 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் கல்வி கடன் வழங்காததால் பூச்சி மருந்துடன் தந்தை - மகன் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி அளித்தனர்.

வந்தவாசி தாலுகா சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 42) என்பவர் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு வந்து தனது மீது மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, அவரது கையில் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு சொந்தமான லாரியை, ரூ.20 ஆயிரம் கடனிற்காக எங்கள் பகுதியை சேர்ந்தவர் திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து லாரியை மீட்டு தர வேண்டும் என்று அய்யப்பன் கூறினார். இதையடுத்து போலீசார், அவரை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவித்தனர்.

தண்டராம்பட்டு தாலுகா பெருந்துறைப்பட்டு பேராயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். தனக்கு வாணாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கல்வி கடன் வழங்க மறுக்கின்றனர். இதனால் தனது படிப்பு தடைபட்டுவிடும். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தற்கொலை கடிதம் மற்றும் பூச்சி மருந்துடன் பிரசாந்தும், முருகனும் கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அன்று கலெக்டர் இல்லாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் பூச்சிமருந்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது முருகனின் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் பறிமுதல் செய்தார். பின்னர் போலீசாரிடம் முருகன், தனது மகன் வங்கி கடனிற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டார். இதுகுறித்து கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து போலீசார், அவர்களை கலெக்டரிடம் அனுப்பி வைத்தனர். இந்த தொடர் சம்பவங்களால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story