காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆம்பூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர்,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.ஞானதாஸ் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் சசிக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்காரவேலன் வரவேற்றார். மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கிரிபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் ரபீக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திடீர் சாலை மறியல்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் திடீரென பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், சமத்துவ மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் சாலை மறியல் செய்ததாக 25 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story