கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் உண்ணாவிரதம்


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 April 2018 4:30 AM IST (Updated: 10 April 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்க அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பொக்லின் எந்திரத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் மணல் குவாரி அமைக்க விடாமல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என கூறி மக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து பல கட்டமாக நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த விளாங்குடி, புனவாசல், கீழப்புனவாசல், ஆற்காடு, வைத்தியநாதன்பேட்டை, பனையூர், திருமழபாடி, திருமானூர், வில்லியநல்லூர், கடுவெளி ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விளாங்குடி கொள்ளிடக்கரையில் பாலம் அருகே திரண்டனர்.

பின்னர் அவர்கள் காலை 8.30 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கலையரசி தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை மணிமொழி தொடங்கி வைத்து பேசினார். உண்ணாவிரதத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் தண்டபானி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஒன்றியசெயலாளர் செந்தில்குமார், துணைச்செயலாளர் அய்யாதுரை, காங்கிரஸ் வட்டார தலைவர் மகாதேவன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சில பெண்கள், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது வாயில் கருப்புத்துணி கட்டி இருந்தனர்.

இந்த போராட்டம் பற்றி அறிந்த திருவையாறு தாசில்தார் லதா, துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை அதிகாரி ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், மணல் குவாரி பிரச்சினை குறித்து இன்று மாலை(நேற்று மாலை) கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் உண்ணாவிரதத்தை நண்பகல் 12.30 மணியளவில் கைவிட்டனர். 

Next Story