பிரதமர் மோடியை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 6 பேர் கைது


பிரதமர் மோடியை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

அரியலூர்-செந்துறை சாலையில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை தி.மு.க.வை சேர்ந்த சத்யா, முரளி, அப்பு என்கிற விநாயகம், வெங்கடேசன், துரை ஆகிய 5 பேர் கையில் கருப்பு கொடியுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி அதில் கருப்பு கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி திரும்பி செல்ல வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் நகர செயலாளர் முருகேசன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தி.மு.க.வினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் கீழே இறங்கி வந்தனர். பின்னர் அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அரியலூரை சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன் என்பவர் நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு அதே செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் போலீசார் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் அங்கேயே நின்ற படி கோஷம் எழுப்பினார். இந்நிலையில் தி.மு.க. தொண்டர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி, அய்யப்பனிடம் பேசி கீழே அழைத்து வந்தார். இதனைதொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.


Next Story