பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தபடி மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம்


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தபடி மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம்
x
தினத்தந்தி 13 April 2018 4:30 AM IST (Updated: 13 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தபடி மு.க.ஸ்டாலின் நேற்று காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார்.

சீர்காழி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தமிழக எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி திருச்சி முக்கொம்பில் தொடங்கினார்.

தொடர்ந்து கல்லணை, தஞ்சை, திருவாரூர், நாகை, செம்பனார்கோவில், மயிலாடுதுறை வழியாக நேற்று முன்தினம் இரவு வைத்தீஸ்வரன்கோவிலில் வந்து தங்கினார்.

6-வது நாளான நேற்று காலை 9.30 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மற்றும் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சென்றனர்.

நேற்று தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின், முத்தரசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பிரசார பயணத்தில் சென்றனர்.

வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, வடக்கு வீதி, அட்டக்குளம், நயினார்தோப்பு, செங்கமேடு, சட்டநாதபுரம், கைகாட்டி, தென்பாதி வழியாக சென்று சீர்காழி புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர். வழி நெடுங்கிலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

சீர்காழிக்கு சென்ற மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்சாண்டர், பொறியாளர் அணி அமைப்பாளர் காழிகலைவாணன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், சசிக்குமார், செல்ல சேது ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, அரசூர், புத்தூர் வழியாக நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்திற்கு சென்றார். அங்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

முன்னதாக பிரதமர் வருகையையொட்டி சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் உள்ள சில வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது. அதேபோல் ஸ்டாலினின் பிரசார வேனிலும் தி.மு.க. கொடிக்கு பதில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது. 

Next Story