விஷம் குடித்து பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்


விஷம் குடித்து பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் எனக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டகாப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(வயது 27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்விக்கும், மாமனார் செட்டி முருகன், மாமியார் கோவிந்தம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் விஷம் குடித்ததாக தெரிகிறது. அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், செல்வியின் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story