மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றம்


மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றம்
x
தினத்தந்தி 13 April 2018 4:45 AM IST (Updated: 13 April 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. மேலும் வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

காரைக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் காஞ்சீபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ கண்காட்சியை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு நேற்று வருகை தந்தார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி காட்டியும், போராட்டங்கள் நடத்தியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள், பல்வேறு அமைப்புகள், தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரைக்குடியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் சிலை வளாகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி கருப்புக்கொடி ஏற்றிவைத்தார்.

தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதவிர காரைக்குடி, கோவிலூர், குன்றக்குடி, சாக்கோட்டை, பள்ளத்தூர், கானாடுகாத்தான், கோட்டையூர், கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் தங்களது வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் கட்சியினர் ஐந்துவிளக்கு பகுதியில் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காரைக்குடி போலீசார் கைதுசெய்தனர். மேலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் தலைமையில் பெரியார் சிலை அருகில் மறியலுக்கு முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்தனர்.

சிவகங்கையில் தி.மு.க. நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையிலும், திருப்புவனத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலும் கட்சியினர் கருப்புச்சட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சியினர் தங்களது வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல் திருப்பத்தூர், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் திமு.க. உள்ளிட்ட கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story