பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு: நடிகை ரம்யாவுக்கு கர்நாடக பா.ஜனதா எதிர்ப்பு


பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு: நடிகை ரம்யாவுக்கு கர்நாடக பா.ஜனதா எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 April 2018 3:00 AM IST (Updated: 13 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் தமிழகத்துக்கு துணை போவதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு,

பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் தமிழகத்துக்கு துணை போவதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது.

நடிகை ரம்யா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்ததோடு, அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைரவிழா கட்டிடத்தையும் திறந்து வைத்தார். சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது. இதனால், அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் பயணித்தார். சிறிய அளவிலான தொலைவை அவர் காரில் கடந்தார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், ‘கருப்பு கொடிக்கு பயந்து நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பயணித்து உள்ளார். இந்தியாவில் இதுவரை நாங்கள் இவரை போன்ற கோழையான பிரதமரை பார்த்தது இல்லை‘ என்றார். இந்த நிலையில், வைகோவின் கருத்து தொடர்பான செய்தியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியும், நடிகையுமான ரம்யா தனது டுவிட்டரில் ‘ Goback Modi ‘ எனும் ‘ஹேஷ்டேக்‘ மூலம் ‘சத்தமாகவும், தெளிவாகவும் கூறுங்கள்‘ என்று பதிவிட்டார்.

பா.ஜனதா எதிர்ப்பு

இதற்கு கர்நாடக பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டு உள்ளதை அக்கட்சியின் சமூக வலைத்தள பிரிவு பொறுப்பாளரான ரம்யா வெளிப்படுத்தி உள்ளார். கர்நாடகத்துக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் சில தமிழ் பிரிவினருக்கு துணைபோகும் வகையில் அவர் குரல் எழுப்புகிறார். முதல்-மந்திரி அவர்களே, இதுபோன்ற கர்நாடக நலன்களில் அரசியல் செய்வதை எப்போது நிறுத்துவீர்கள்?‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல், மைசூரு-குடகு பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா தனது டுவிட்டரில், ‘ரம்யா தனது உண்மை முகத்தை காட்டி உள்ளார். தமிழர்களின் போராட்டத்துக்கு ரம்யா ஆதரவு அளித்து உள்ளார். உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ரம்யாவை நீக்க வேண்டும். கன்னடர்கள் அனைவரும் மண்டியா காவிரி தாயின் குழந்தைகளே. காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் எனக்கோரி நடைபெறும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் ரம்யா மற்றும் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்துக்கு வேண்டுமா?‘ என்று எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Next Story