முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் பறிமுதல் - தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை


முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் பறிமுதல் - தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 April 2018 6:38 AM IST (Updated: 13 April 2018 6:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கடைகளில் ஆய்வு செய்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகளை பறிமுதல் செய்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் செந்தில்குமாரி அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) லெனின் தலைமையில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்களின் விதிகள் 2011-ன் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள தினசரி மார்க்கெட், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடை, மீன்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, தாராபுரம் தொழிலாளர் துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், திருப்பூர் 1-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் சண்முகவேலு, 2-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் இளங்கோவன், 2-ம் வட்ட முத்திரை ஆய்வாளர் ராஜேந்திரன், தாராபுரம் முத்திரை ஆய்வாளர் குமாரசாமி மற்றும் உடுமலை முத்திரை ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

43 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உரிய காலத்தில் மறுமுத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் 10 பறிமுதல் செய்யப்பட்டன. மறுமுத்திரையிட்ட சான்று தெரியும்படி வைக்காத 4 கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

வணிகர்கள் உபயோகத்தில் வைத்திருக்கும் அனைத்து வகையான எடையளவு கருவிகளையும் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். மேற்படி முத்திரையிடப்பட்ட சான்று தெரியும்படி வைக்கப்பட வேண்டும். இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) லெனின் தெரிவித்துள்ளார்.

Next Story