திருப்பூர் மாநகரில் 4-வது குடிநீர் திட்டம் குறித்து வங்கி அதிகாரிகள் குழு ஆய்வு


திருப்பூர் மாநகரில் 4-வது குடிநீர் திட்டம் குறித்து வங்கி அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 13 April 2018 6:52 AM IST (Updated: 13 April 2018 6:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் 4-வது குடிநீர் திட்டம் குறித்து வங்கி அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சியின் 2050 ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆகும். இந்த மக்கள் தொகைக்கு தேவையான குடிநீர் தேவையை ஈடு செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் 2015-16-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 30 சதவீதம் தற்போது முடிந்துள்ளது. வருகிற 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2-ம் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையில் புதிய நீரேற்று நிலையம் அமைத்தல், நீருந்து குழாய்கள் பதித்தல், புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலைத்தொட்டிகள் கட்டுதல், 1,062 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் வினியோக குழாய்கள் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ரூ.992 கோடியே 94 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2017-20-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் செயல்படுத்த தொழில்நுட்ப குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.525 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில தொழில்நுட்ப குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 11 இடங்களில் நீருந்து நிலையங்கள், பாதாள சாக்கடை சேகரிப்பு குழாய்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. 74 ஆயிரத்து 293 குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இந்த இரு திட்டங்களுக்கும் அம்ரூத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி உதவி போக மீதம் உள்ள செலவினம் ஆசியன் வளர்ச்சி வங்கியால் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஆசியன் வளர்ச்சி வங்கி அதிகாரிகள் குழுவினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் அசோகன், இந்த திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கினார். இதில் மாநகர பொறியாளர், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story