ஆதரவற்று கிடந்த ஆண் குழந்தை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? போலீஸ் விசாரணை


ஆதரவற்று கிடந்த ஆண் குழந்தை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 April 2018 4:30 AM IST (Updated: 15 April 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஆதரவற்று கிடந்த 8 மாத ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர். இந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஜி.ஏ.கெனால் சாலையில் சுற்றுலா ஆய்வு மாளிகை அருகே முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் நடைபாதையில் அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.அப்போது முனியாண்டவர் கோவிலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. கோவில் அருகே உள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், இந்த சத்தத்தை கேட்டு கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது ஒரு துணியில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்த 8 மாதமே ஆன ஆண் குழந்தை ஆதரவற்று கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் யாராவது கோவில் பகுதியில் நிற்கிறார்களா? என அவர்கள் தேடி பார்த்தனர். ஆனால் யாரும் இல்லை. குழந்தையும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. உடனே இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார், குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் குழந்தையை போலீசார் மீட்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர். குழந்தையை கோவிலில் போட்டுவிட்டு சென்றது யார்? குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை போட்டுவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story