திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை


திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 April 2018 3:45 AM IST (Updated: 15 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி வன்னிமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் பிரபு (வயது 27). சேலத்தில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கொண்டலாம்பட்டி கரட்டூர் பகுதியை சேர்ந்த கோமதி (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை தொடங்கினர்.

இதனிடையே, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளையான பிரபு அதிகளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இருப்பினும் அவர் தினமும் மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில், தனது கணவர் மதுவுக்கு அடிமையாகி விட்டாரே? என விரக்தி அடைந்த கோமதி, கணவர் பிரபுவுடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த பிரபு நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு தற்கொலை முயற்சிக்கு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story