கரூரில் 18-ந் தேதி அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்: அனுமதி மறுத்தால் தடையை மீறி நடத்தப்படும்


கரூரில் 18-ந் தேதி அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்: அனுமதி மறுத்தால் தடையை மீறி நடத்தப்படும்
x
தினத்தந்தி 16 April 2018 4:00 AM IST (Updated: 16 April 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 18-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தால் தடையை மீறி நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூரில் பஸ் நிலையம் அருகே வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் சின்ன கொங்கு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். டி.டி.வி.தினகரன் தலைமையில் சட்டமன்றத்திற்கு நாங்கள் செல்லும்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் விரைவில் வீட்டுக்கு செல்வார்கள். பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமையும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 18-ந்தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. எந்தவித இடையூறு ஏற்படுத்தினாலும், அனுமதி மறுத்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கரூர் மாவட்டத்திற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் வருகிற தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், “காவிரி விவகாரத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியில் இருந்து தம்பிதுரை விலகி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். மத்திய அரசுக்கு கொடுக்கிற ஆதரவுகளை தமிழக அரசு விலக்கி இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். கூட்டணி பற்றி டி.டி.வி.தினகரன் அறிவிப்பார்” என்றார். முன்னதாக கூட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.பி.லோகநதான், தாரணி சரவணன், சுப்ரமணி, கோல்டு ஸ்பார்ட் ராஜா, காதப்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story