விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது பொதுமக்கள் சாலை மறியல்


விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 16 April 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை காடம்பாடியில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் அருகே வீர சொக்கநாத விநாயகர் கோவில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்த பழங்கால மரத்தை வைத்து வழிபட்டு வந்தனர். மரம் பட்டுபோனதையடுத்து, பொதுமக்கள் அந்த இடத்தில் சிறிய கொட்டகை அமைத்து விநாயகர் சிலை வைத்து கடந்த 2 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். அதைதொடர்ந்து அதன் அருகிலேயே சிறிய அளவில் கோவில் கட்டுவதற்கு கிராம மக்கள் முடிவு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 75 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் நாகை தாசில்தார் ராகவன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் கொடுக்காமல் திடீரென கோவிலை பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போது போலீசார் பொதுமக்களை அங்கே கூட விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில், பா.ஜ.க.வை சேர்ந்த ரஜினிகாந்த் முன்னிலையில் நாகை - நாகூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அகற்றப்பட்ட விநாயகர் கோவிலை அதே இடத்தில் கட்டித்தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், நாகை தாசில்தார் ராகவன், கிராம நிர்வாக அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

75 சதவீத பணிகள் முடிவடைந்த கோவில் எந்தவித முன் அறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்டுள்ளது. எனவே அதேஇடத்தில் கோவில் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து அதன் அருகிலேயே மாற்று இடம் ஏற்பாடு செய்து அங்கு கோவில் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று தாசில்தார் ராகவன் உறுதியளித்தார். ஆனால் அதே இடத்தில்தான் கோவில் வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாகை - நாகூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story