திருடன் என நினைத்து அடித்து உதைத்ததில் வியாபாரி சாவு போலீஸ் விசாரணை


திருடன் என நினைத்து அடித்து உதைத்ததில் வியாபாரி சாவு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 8:14 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே திருடன் என நினைத்து அடித்து உதைத்ததில் வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் பரியமால்குடா டாக்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அந்தோஜி வீராச்சாரி (வயது 38), தச்சு வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி. இவர் கடந்த 12-ந் தேதி வியாபார நிமித்தம் தொடர்பாக ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் செங்கனூருக்கு சென்றார்.

அங்கு வியாபாரத்தை முடித்துவிட்டு, ஐதராபாத்திற்கு ரெயிலில் புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய அந்தோஜி வீராச்சாரி ஊருக்குள் செல்லாமல், ஜோலார்பேட்டை கட்டேரி முனீஸ்வரன் கோவில் அருகில் தர்மகர்த்தா வட்டம் பகுதியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்க சென்றார்.

அடித்து, உதைத்தனர்

இரவு நேரம் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்த அந்தோஜி வீராச்சாரி மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. திடீரென அந்தோஜி வீராச்சாரி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றார். அதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் திருடன் தான் வீட்டிற்குள் நுழைய முயல்கிறான் என நினைத்து அந்தோஜி வீராச்சாரியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அந்தோஜி வீராச்சாரியை பார்த்த போது, அவர் இறந்து கிடந்தார்.

7 பேரிடம் விசாரணை

இதுகுறித்து கட்டேரி கிராம நிர்வாக அலுவலர் ஜான்பாஷா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதி இளைஞர்கள் தான் அந்தோஜி வீராச்சாரியை அடித்து கொலை செய்ததும் அவர் வியாபாரி என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, அப்பகுதி இளைஞர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story