விநாயகர் கோவில் இடித்து அகற்றம்: 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்


விநாயகர் கோவில் இடித்து அகற்றம்: 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 April 2018 4:15 AM IST (Updated: 17 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாகை காடம்பாடியில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் அருகே வீர சொக்கநாத விநாயகர் கோவில் உள்ளது. சிறிய கொட்டகையில் உள்ள இந்த கோவிலுக்கு அருகே சிறிய அளவில் கோவில் கட்டுவதற்கு கிராம மக்கள் முடிவு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இந்த கோவிலை நேற்றுமுன்தினம் நாகை தாசில்தார் ராகவன் மற்றும் போலீசார் எந்தவித முன் அறிவிப்பும் கொடுக்காமல் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில், நாகை - நாகூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.

75 சதவீத பணிகள் முடிந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டதை கண்டித்தும், அதே இடத்திலேயே மீண்டும் கோவில் கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தியும் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் மாவட்ட தலைவர் செழியன், இந்து முன்னணி நகர செயலாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வை சேர்ந்த சுகுமார் ஆகியோரது தலைமையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களை மறித்தனர்.

இதனால் பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது முன் அறிவிப்பின்றி விநாயகர் கோவில் அகற்றப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் கோவில் கட்டித்தரக்கோரியும் கோஷங் கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கிராம மக்கள் சார்பில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கோவில் கட்டித்தரக்கோரி நாகை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு அளித்தனர். அப்போது, அதே இடத்தில் கோவில் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உறுதியளித்தார். 

Next Story