தண்டவாளத்தில் சிமெண்டு கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை


தண்டவாளத்தில் சிமெண்டு கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 April 2018 4:30 AM IST (Updated: 18 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே தண்டவாளத்தில் சிமெண்டு கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொரப்பூர்,

சென்னையில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மேட்டூருக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் கற்கள் இருந்துள்ளது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார்.

அதற்குள் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த கற்களை உடைத்து கொண்டு சென்றது. இதுதொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர் மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கும், ஜோலார்பேட்டை ரெயில்வே கன்ட்ரோல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

ரெயிலை கவிழ்க்க சதியா?

பின்னர் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, போலீசார் அர்ச்சுனன், சக்கரபாணி மற்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது சிமெண்டு கற்கள் என தெரியவந்தது. இந்த கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தார்களா? அல்லது அந்த வழியாக சென்றவர்கள் யாராவது விளையாட்டுக்காக வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் சிமெண்டு கற்கள் கிடந்ததால் அந்த வழியாக சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story