கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக வாகன நிறுத்துமிடம் அமைக்க பணிகள் தொடங்கியது


கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக வாகன நிறுத்துமிடம் அமைக்க பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 18 April 2018 4:00 AM IST (Updated: 18 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக வாகன நிறுத்து மிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற நாட்களில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் வருகை தருவது உண்டு.

பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வாகனங்கள் நிறுத்த கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் பக்கவாட்டில் 2 புறம் இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் நிறுத்துமிடம் வசதி உள்ளது. அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டாலும், பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பும், வளாக பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் பிரதான கட்டிடத்தின் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக வாகன நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியது. வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக அளவீடு பணி நேற்று நடந்தது.

இதில் ஒப்பந்ததாரர்கள் இடத்தை அளவு செய்து குறியீடு குறித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கூடுதலாக அமைக்கப்பட உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனங்கள் தனியாகவும், கார்கள் தனியாகவும் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. இரு சக்கர வாகன நிறுத்துமிடம் 45 மீட்டர் நீளத்திலும், 5 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. மண் தரையை சமப்படுத்தி அதன் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. மேற்கூரை ‘கூலிங் ஷீட்’களால் அமைக்கப்படும். இதேபோல கார்கள் நிறுத்துமிடத்திலும் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் ஓரிரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர். 

Next Story