காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 18 April 2018 4:30 AM IST (Updated: 18 April 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 14 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

மலைக்கோட்டை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்தனர். அங்கு பிணம் எரிக்கும் இடத்தில் அவர்கள் கழுத்தில் மாலையுடன், நெற்றி, முகத்தில் திருநீறு பூசி பிணம் போல் படுத்து, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பிணமாக்கி விட்டதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளை பிணம்போல் ஆக்கி விட்டது. இதை அனைவருக்கும் உணர்த்தவே இன்று நாங்கள் சுடுகாட்டில் பிணம் போல் படுத்து போராட்டம் நடத்தினோம். அடுத்த மாதம் (மே) 3-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்காவிட்டால், அனைவரையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அப்போதும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றால் பிரதமர் வீட்டின் முன்பு தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்பட ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே ஓயாமரி சுடுகாட்டில் உள்ள எரிமேடையில் ஏற்கனவே இறந்த ஒருவரின் பிணம் எரிக்கப்பட்டிருந்தது. அதில் மிஞ்சிய எலும்புகளை எடுத்து பால் தெளித்து, சடங்குகள் செய்ய இறந்தவரின் உறவினர்கள் வந்தனர். அப்போது அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், இறந்தவரின் உறவினர்கள் சடங்குகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. விவசாயிகள் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் எலும்புகளை எடுத்து உரிய சடங்குகளை செய்தனர்.


Next Story