கனிமொழி குறித்து தவறாக விமர்சனம்: எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு, தி.மு.க.வினர் 200 பேர் கைது


கனிமொழி குறித்து தவறாக விமர்சனம்: எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு, தி.மு.க.வினர் 200 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2018 5:30 AM IST (Updated: 19 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கனிமொழி குறித்து தவறாக விமர்சனம் செய்த பா.ஜ.க. தேசிய செய லாளர் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணா நிதியின் மகள் கனிமொழி குறித்து தவறாக விமர்சனம் செய்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் புதுவையில் நேற்று தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

ஊர்வலத்தில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், நிர்வாகிகள் சக்திவேல், குரு, தைரியநாதன், முகமது யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை வழியாக ராஜா தியேட்டர் சந்திப்பினை அடைந்தது. அங்கு அவர்கள் திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் மறைத்து வைத்திருந்த எச்.ராஜாவின் உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். அதை அணைக்க முயன்ற போலீசாரை தி.மு.க.வினர் சுற்றி வளைத்து தடுத்தனர். இந்த நிலையில் மற்றொரு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. மேலும் எச்.ராஜாவின் படத்தையும் அவமதிப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த சமயத்தில் ஒருசிலர் மற்றொரு எச்.ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அதைத்தடுக்க முயன்ற போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசாரும், தி.மு.க.வினர் ரோட்டில் விழுந்து உருண்டனர்.

இறுதியாக உருவபொம்மையை எரிக்க விடாமல் போலீசார் பறித்துச்சென்றனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர். அப்போது சுமார் 150 பேர் கைதாகினார்கள்.

இதேபோல் வடக்கு மாநில தி.மு.க.வினர் செஞ்சி சாலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு கட்சியின் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஜே.வி.எஸ். சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவின் உருவ பொம்மையை ஊர்வலமாக தூக்கி சென்றனர்.

புஸ்சி வீதி - காந்தி வீதி சந்திப்பில் வந்தபோது அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவரது உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். அங்கு இருந்த போலீசார் விரைந்து சென்று அருகில் உள்ள கடைகளில் இருந்து வாளிகளில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரு போராட்டங்களின்போதும் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

திருவண்டார்கோவிலில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் காந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story