தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது


தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகர பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு போவது மற்றும் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் அடிக்கடி புகார்கள் வந்தன. அதன் பேரில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் பாலக்கரை வேர்கவுஸ் பகுதியில் பஸ்நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில்அவர்கள், பாலக்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 21) மற்றும் செந்தண்ணீர்புரம் பாரி தெருவை சேர்ந்த வில்சன் ஆண்ட்ரூஸ் (30) என்றும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது எனவும் தெரியவந்தது.

4 பேர் சிறையில் அடைப்பு

அருண்குமார், வில்சன்ஆண்ட்ரூஸ் ஆகியோர் சேர்ந்து கோட்டை, பாலக்கரை, எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த குற்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களது கூட்டாளிகள் திருச்சி காஜாபேட்டையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஷ் (20) மற்றும் மயிலாடுதுறை ரெயிலடியை சேர்ந்த அன்பரசு (49) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். மோட்டார் சைக்கிள் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அருண்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாராட்டு

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 28 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் மதிப்புடைய 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன், கடிகாரம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 83 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நகை பறிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.


Next Story