கொடி கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


கொடி கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே கொடி கம்பம் சேதப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொண்டல் கடைவீதியில் பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வெட்டுடன் கூடிய கொடி கம்பத்தை சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு.இனியவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கொடி கம்பத்தை சேதப் படுத்திய இடத்திற்கு வந்தனர்.

சாலை மறியல்

பின்னர் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொண்டல் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொண்டல் கடைவீதியில் உள்ள மற்ற கட்சிகளின் கொடி கம்பங்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்தால்தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறினர். அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்வோம் என்று கூறினார். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலை கைவிட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே நின்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் கொண்டல் கடைவீதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக், மேற்கண்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story