பழனியில் துணிகரம் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
பழனியில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பழனி,
பழனி கவுண்டன்குளம் கணபதி தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி ராணி (வயது 45). இவர் நேற்று இரவு தனது உறவினருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இவர் கள் பழனி ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 2 வாலிபர்கள் வந்தனர். இவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ராணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ராணி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பழனி நகரில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவம் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து வருகிறார்கள். எனவே பழனி நகரில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story