ஊட்டியில் போலீஸ் பயிற்சி மைதான பணிகள்; போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்


ஊட்டியில் போலீஸ் பயிற்சி மைதான பணிகள்; போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் போலீஸ் பயிற்சி மைதானம் பணிகளை போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

ஊட்டியில் போலீஸ் பயிற்சி மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்ச்ஹில், உசில்மேடு ஆகிய பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சீகை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாக காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 490 மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் காவல்துறை அனுமதி பெற்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

தற்போது அந்த 7 ஏக்கர் இடத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் நிதி பெற்று நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பயிற்சி மைதானம் அமைக்க போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நடவடிக்கை எடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து போலீஸ் பயிற்சி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் திருமேனி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போலீஸ் பயிற்சி மைதானம் அமைப்பதற்கான பணியை போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார். மேடான பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு உடற்பயிற்சி, ஓட்டம் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் போலீசார் பயிற்சி எடுப்பதற்கு காவல்துறையின் சார்பில் மைதானம் இல்லை. ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. காவல்துறை மூலம் நிரந்தரமான பயிற்சி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

தற்போது போலீஸ் பயிற்சி மைதானம் அமைக்கும் பணியை தொடங்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் நிதி பெற்று பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மைதானம் அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட கலெக்டர் காவல் துறைக்கு செய்து வருகிறார்.

பயிற்சி மைதானத்தை சுற்றி நீலகிரியின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் வகையில் புல்வெளிகள், மலர் செடிகள் அமைக்கவும், மிக அழகான மைதானமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறைக்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பரிந்துரைகள் காவலர் குடியிருப்பு வாரியத்துக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

Next Story