பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ‘ஸ்மார்ட் வாட்ச்’!


பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ‘ஸ்மார்ட் வாட்ச்’!
x
தினத்தந்தி 20 April 2018 10:00 PM GMT (Updated: 19 April 2018 8:11 AM GMT)

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றிய அதிசய சம்பவம் நடந்திருக்கிறது.

மெரிக்கா கான்சாஸ் பகுதியைச் சேர்ந்த அந்த 25 வயதுப் பெண்ணின் பெயர் ஹீதர் ஹெண்டர்ஷாட்.

சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயான ஹீதர், தன் உடல்நலத்தைக் கண்காணிப்பதற்காக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வாங்கியிருந்தார்.

கடந்த மாதத்தில் ஒருநாள் ஹீதரின் வாட்ச் திடீரென்று அவரது இதயத்துடிப்பு அதிகரித்திருப்பதற்கு அடையாளமாக எச்சரிக்கை ஒலி எழுப்பத் தொடங்கியுள்ளது.

தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் திடமாக நம்பும் ஹீதர், வாட்சில்தான் ஏதோ கோளாறு என்று எண்ணி அலாரத்தை ஆப் செய்துவிட்டார்.

ஆனால் அடுத்த 24 மணி நேரமும் வாட்ச் தொடர்ந்து ஒலி எழுப்பவே, ஹீதரின் கணவர் அந்த வாட்சை தான் வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார்.

அப்போது வாட்ச் ஒலி எதுவும் எழுப்பவில்லை. எனவே அவர் தனது மனைவியை வற்புறுத்தி உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில், அதிர்ச்சியூட்டும் விதமாக ஹீதருக்கு ‘ஹைபர் தைராய்டிசம்’ பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

பொதுவாக ஹைபர்தைராய்டிசம் ஏற்பட்டால் உடலில் பல அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் ஹீதருக்கு அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.

எனவே ஹீதரின் வாட்ச் மட்டும் சமிக்ஞை கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் தனது பிரச்சினையை கவனிக்காமலே விட்டிருப்பார், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.

பொதுவாக மருத்துவர்கள் இதுபோன்ற வாட்சுகளை நம்புவதில்லை.

அவை தவறாக ஒலி எழுப்பி தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கி இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துவிடும் என்பது பல மருத்துவர்களின் கருத்து.

ஆனால் அந்த எண்ணம் தவறு என்று இந்த ஸ்மார்ட் வாட்ச் நிரூபித்திருக்கிறது, அது ஒரு பெண்ணின் உயிரையே காப்பாற்றிவிட்டது. 

Next Story