விபரீத நோயால் தவிக்கும் இளம்பெண்!


விபரீத நோயால் தவிக்கும் இளம்பெண்!
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 3:44 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வினோதமான உணவு ஒவ்வாமை நோயால் உயிர்ப் போராட்டம் நடத்திவருகிறார்.

ண்டனில் வசிக்கும் 25 வயதான சோபி வில்லிஸ் என்ற அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது, உலகில் ஒன்றரை லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிதான நோயாகும்.

‘மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம்’ என்ற இந்த நோயால், அரிசி உணவு மற்றும் காய்கறிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டிய நிலை சோபி வில்லிஸுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அரிசி உணவுகளைத் தவிர்த்தால் சோபியின் உடலில் கொப்புளங்கள், சிராய்ப்புகள் மற்றும் உதடு தடித்து விகாரமாகுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மணப்பெண்கள் திருமணத்தின்போது பயன்படுத்தும் முகத்திரை வடிவமைப்பாளராக உள்ள சோபி, ஈஸ்ட், இறைச்சி வகைகள், மீன், பால் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதையும் சாப்பிடுவதில்லை.

அதோடு, வெயில், இடி போன்றவற்றாலும் இவர் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தனக்கு ஏற்பட்டுள்ள வினோத நோயால் சோபி தினமும் 60 மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார். இந்த நோய் பற்றி அறிந்திராதபோது சாதாரணமாக உணவுகளை எடுத்துக்கொண்டு நாள்தோறும் கடுமையான ஒவ்வாமையால் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார் சோபி.

கடந்த 2016-ம் ஆண்டு முதல்முறையாக மருத்துவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் சோபிக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் கண்டுபிடித்தனர்.

2014-ல் நோய் தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்து 2 ஆண்டு காலம் இங்கிலாந்தில் சுமார் 30 மருத்துவமனைகளை சோபி ஏறி இறங்கியிருக்கிறார்.

2016 ஆகஸ்டு மாதம் மருத்துவர்கள் சோபி வில்லிஸுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்னவென்று கண்டுபிடித்த பின்னரே அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார், பகலில் வெளியே செல்வதையும் தவிர்க்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித கஷ்டம்! 
1 More update

Next Story