அங்கீகாரம் குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி அதிகாரிகள் குழுவினர் ‘திடீர்’ ஆய்வு


அங்கீகாரம் குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி அதிகாரிகள் குழுவினர் ‘திடீர்’ ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2018 4:15 AM IST (Updated: 20 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்காட்டில் உள்ள ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

ஏற்காடு,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாவட்டந்தோறும் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வருவதால், தமிழகத்தில் அப்பள்ளிகளை தொடங்கும் கல்வி நிறுவனங்கள் முறையாக மாநில அரசிடம் அங்கீகாரம் பெறுவதில்லை.

இதுபோன்று அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கும் பள்ளிகள் போன்றவை வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கனவே மாநில கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்திட, மாவட்ட வாரியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் நிபுணர் குழுவினர் நேற்று ஏற்காட்டில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், மாணவர் எண்ணிக்கை மற்றும் அங்கீகாரம் குறித்தும் முழுமையாக ஆய்வு நடத்தினர். மேலும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில்,“தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அங்கீகாரம் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு நடத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட பல துறையை சேர்ந்த 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஆய்வு நடத்தும். ஏற்காட்டில் ஆய்வு நடத்தப்பட்ட பள்ளியில், 6, 7, 8 வகுப்புகளுக்கு மட்டும் சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், 1-ம் வகுப்பு முதல் நடத்தி வருகின்றனர். மாநில அரசிடம் அங்கீகாரம் பெறுவதில்லை. மைனாரிட்டி எனக்கூறி, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. மைனாரிட்டி என்பதற்கான ஆவணங்களும் இல்லை. இந்த ஆய்வு குறித்து கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும்“ என்றார். 

Next Story