தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி


தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்படும் தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு காலை 11 மணிக்கு சேலம் காமலாபுரம் விமானம் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது கடமையை முறையாக செய்யவில்லை என்பதாலும், மக்களின் பிரச்சினையை களைவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரசியலமைப்பு அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவது போன்ற செயல்பாடுளை செய்து வருவதை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பின்னரும், தொடர்ந்து கவர்னர் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறார்.

தற்போது கூட பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன் அமைக்க கவர்னருக்கு தகுதி இல்லாத நிலையில், அவசர அவசரமாக கமிஷன் நியமித்து இருக்கிறார், இது போன்ற பிரச்சினைகளில் கமிஷன் அமைக்கும் போது பெண் ஒருவர் இடம் பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால், அதனையும் மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார். இது போன்ற நடவடிக்கையால் தான், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க கூறி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருந்தால்தான் இது போன்ற குற்றங்கள் குறையும். ஆனால் ஆட்சியே இல்லாத நிலைதான் உள்ளது. எச்.ராஜா விவகாரத்தில், பாரதீய ஜனதா கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மேல் அதுபற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சேலம் விமான நிலையத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.யை, விமான நிலையம் சுற்றியுள்ள விவசாயிகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும். இந்த விரிவாக்க பணியால் விவசாயம் முற்றிலுமாக பொய்த்து போகும் நிலை உருவாகும் என்று உருக்கத்தோடு தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த அவர், இதுகுறித்து தி.மு.க. குரல் கொடுக்கும் என்றும், இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

Next Story