சேலத்தில் உள்ள மூக்கனேரியை பார்வையிட்ட நடிகர் சிம்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு


சேலத்தில் உள்ள மூக்கனேரியை பார்வையிட்ட நடிகர் சிம்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியை நடிகர் சிம்பு பார்வையிட்டார். அவரை காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் மூக்கனேரி உள்ளது. 56 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மூக்கனேரியை பார்வையிட நடிகர் சிம்பு வந்தார்.

அவர் ஏரியில் பரிசல் சவாரி செய்து, சுற்றிப்பார்த்தார். அவருடன் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் ஏரியை சுற்றிப்பார்த்த அவர் பின்னர் கரை திரும்பினார். தொடர்ந்து நடிகர் சிம்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், காவிரி தண்ணீர் பிரச்சினைக்காகவும் நான் கூறிய கருத்துகளை கர்நாடக மக்கள் வரவேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலம் மக்கள் தாமாகவே முன்வந்து ஏரிகளை தூய்மைப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனை சமூக வலைதளத்தில் பார்த்து, அதனை நேரில் பார்வையிட வந்துள்ளேன். ஏரி நீர் நிரம்பி காட்சி அளிப்பதை பார்க்க நன்றாக இருந்தது. நடிகர் சங்கம் தொடர்பாக எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். எச்.ராஜா குறித்து எனது தந்தை தெரிவித்த கருத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்னர் நடிகர் சிம்பு அம்மாபேட்டை ஏரி, குமரகிரி ஏரி ஆகியவற்றை பார்வையிட சென்றார். முன்னதாக நடிகர் சிம்பு மூக்கனேரிக்கு வந்திருந்த தகவல் பரவியதும், அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நடிகர் சிம்பு பரிசலில் சென்று ஏரியை பார்வையிட்ட பின்னர் கரை திரும்பிய போது, ரசிகர்கள் பலர் திரண்டு இருந்ததால் அவர் கரையில் ஏற முடியாமல் சிரமப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். 

Next Story