மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணி
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செல்போன் செயலி மூலம் தேர்தல் துறைக்கு தகவல் அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாவட்டங்கள்தோறும் தேர்தலின்போது பயன்படுத்துவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை குறித்து தேர்தல் துறை துரிதமாக தெரிந்துகொள்ளும் விதமாக மாநில மற்றும் மாவட்ட தேர்தல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அனுப்பும் முறையை தேர்தல் துறை தற்போது பயன்படுத்தி வருகிறது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களின் கணினி வரிசை எண்ணை செல்போன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு, அதனை உடனடியாக இணையதளம் மூலம் மாநில தேர்தல் துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பும் பணி நடைபெற்றது.

இந்த பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் கணினி வரிசை எண்ணை செல்போன் செயலி மூலம் ஸ்கேன் செய்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், தேர்தல் தனி தாசில்தார் வெற்றிவேல், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி புருஷோத்தமன், தே.மு.தி.க. நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story