காவிரி போராட்டத்தில் பஸ்களை உடைத்ததாக கைதானவர்கள்: 20 பேர் ஜாமீனில் விடுதலை


காவிரி போராட்டத்தில் பஸ்களை உடைத்ததாக கைதானவர்கள்: 20 பேர் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 9:22 PM GMT)

காவிரி பிரச்சினைக்காக திருச்சியில் நடந்த போராட்டத்தின் போது பஸ்களை உடைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 பேர் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். சிறைவாசலில் மீண்டும் 2 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் கடந்த 11-ந்தேதி இரவு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் திடீரென திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள்-இளைஞர்கள், அந்த வழியாக வந்த கர்நாடக-தமிழக அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்து மாணவர்கள், இளைஞர்கள் என 20 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் கடந்த 12-ந்தேதி இரவு திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் ஜாமீன் வழங்க கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரகுரு அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து 20 பேரும் நேற்று காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை பெற்றோர் மற்றும் மாணவர்கள்-இளைஞர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

விடுதலையாகி வெளியே வந்த 20 பேரில் தென்னூர் பகுதியை சேர்ந்த பீர் முகமது, முகமது ஆஜிம் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே கர்நாடக பஸ்சை உடைத்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக கண்டோன்மெண்ட் போலீசார் வந்தனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் பெற்றோர், வக்கீல்கள் கோஷமிட்டனர். ஆனாலும் போலீசார் பீர் முகமது, முகமது ஆஜிம் இருவரையும் கைது செய்து திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் எண் 2-ல் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை வருகிற 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு முரளிதரகண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக சிறை வளாகத்தில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவிரி பிரச்சினைக்காக நடந்த போராட்டத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்டோரும் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story