அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது காங்கிரஸ் அறிக்கை


அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது காங்கிரஸ் அறிக்கை
x
தினத்தந்தி 20 April 2018 4:53 AM IST (Updated: 20 April 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மதுகவுட் யாஷ்கி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் கூட்டாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கார் விபத்தில் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய அந்த லாரி பா.ஜனதா பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அனந்தகுமார் ஹெக்டே கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்தை ரத்து செய்தார்.

ஆயினும் இந்த விபத்தில் தன்னை கொல்ல சதி திட்டம் அடங்கி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது. பசவண்ணர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தபோது, அந்த மாலை கீழே விழுந்துவிட்டது. அமித்ஷாவை பசவண்ணர் நிராகரித்துவிட்டார் என்பதற்கான அடையாளமே இந்த நிகழ்வு ஆகும்.

கர்நாடகத்தில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதாவில் பெரிய தலைவர்கள் இல்லையா?. முதல்-மந்திரி வேட்பாளரான எடியூரப்பா மீது பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லையா?. எதற்காக அக்கட்சி வெளி மாநிலங்களில் இருந்து தலைவர்களை வரவழைத்து பேச வைக்கிறார்கள்?. நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு கர்நாடகத்தில் இருந்து வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பா.ஜனதா எம்.பி.யாக தேர்ந்து எடுத்துள்ளது. கர்நாடகத்தில் கன்னடர்கள் யாரும் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இல்லையா?.

பொய்களை கூறும் அமித்ஷா, கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கியதாக நேற்று (அதாவது நேற்று முன்தினம்) சில விவரங்களை கூறி இருக்கிறார். அதற்கு நாங்கள் இங்கே சில புள்ளி விவரங்களை வழங்குகிறோம். அதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,435.95 கோடி வழங்கியது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களான மராட்டிய மாநிலத்திற்கு ரூ.8,195 கோடி, குஜராத்திற்கு ரூ.3,894 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.2,153 கோடி ஒதுக்கப்பட்டது. வறட்சி நிதி ஒதுக்கியதில் மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது ஏன்?.

கர்நாடக காங்கிரஸ் அரசு ரூ.8,165 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இது அமித்ஷாவுக்கு தெரியுமா?. தேசிய வங்கிகளில் இருக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய உதவுமாறு சித்தராமையா கேட்டார். ஆனால் மத்திய அரசு உதவி செய்யாதது ஏன்?. அமித்ஷா பொய் பேசுவதை விட்டுவிட்டு உண்மை நிலை மற்றும் வளர்ச்சி பற்றி பேச வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 

Next Story