4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: தனி அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: தனி அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 20 April 2018 5:23 AM IST (Updated: 20 April 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தனி அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்- பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 4 வழிச்சாலை அமைப்பதனால் சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடு, கடை, மரங்கள் அகற்றப்படும் என்பதால் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும், சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான அதிகாரியாக தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நிலம் எடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள தனி அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்து எழுதி கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் அலுவலகத்தில் குவிந்தனர்.

இவர்கள், அங்கு வழங்கப்பட்ட ஆட்சேபனை மனுக் களை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு வழங்கினர். அப்போது, திடீரென விவசாயிகள் தனி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். அப்போது, 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சாலையோரத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், ராமையன்பட்டி, மூலச்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் விசாரணை என்ற பெயரில் அவர்களை அழைத்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் என்று அதிகாரிகளே எழுதி கையெழுத்து பெற்று மோசடி செய்கின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஈடுபடுத்தாமல், வருவாய்த்துறை அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், இந்த புதிய சாலை திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்வதற்கான திட்ட அறிக்கையையும் அளித்துள்ளோம். விவசாயிகள், பொதுமக்களின் கருத்துகளை முழுமையாக அறிந்த பின்னரே அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story