ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாதது குறித்து பிரதமர், நிதி மந்திரிக்கு கடிதம் எழுதுவேன்


ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாதது குறித்து பிரதமர், நிதி மந்திரிக்கு கடிதம் எழுதுவேன்
x
தினத்தந்தி 20 April 2018 5:47 AM IST (Updated: 20 April 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாதது குறித்து பிரதமருக்கும், மத்திய நிதிமந்திரிக்கும் கடிதம் எழுதுவேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்து புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. இதனால் மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுக்களுக்கு சமமாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் வரவில்லை. இதனால் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையின்மை ஏற்பட்டது.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பதுக்குவதைவிட ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பதுக்குவது மிக சுலபம். இதனால் மக்கள் தாங்கள் வங்கிகளில் சேமித்த பணத்தை ஏ.டி.எம். மையங்கள் மூலம் எடுக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம். இந்த தவறுகளுக்கான பொறுப்பை பிரதமர் ஏற்க வேண்டும். புதுச்சேரியில் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இது குறித்து பிரதமருக்கும், நிதித்துறை மந்திரிக்கும் உடனடியாக கடிதம் எழுதுவேன்.

எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி. தலைவர்களை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தி விமர்சித்து மக்களை நெருங்க நினைக்கின்றார். இவர் ஏற்கனவே பலமுறை பெரியாரையும், தமிழ்் மொழியையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடத்திவரும் போராட்டங்களையும் இதுபோல் தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜாவின் தரமற்ற விமர்சனத்தால் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக நடைபெற்று வரும் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story