பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை துப்பாக்கியால் சுட அனுமதிக்க வேண்டும்


பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை துப்பாக்கியால் சுட அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 April 2018 10:15 PM GMT (Updated: 20 April 2018 7:49 PM GMT)

பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை துப்பாக்கியால் சுட அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சுதர்சன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் சாதி சான்று, வாரிசு சான்று, சிறு, குறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றுகள் வழங்க அலுவலர்கள் கால தாமதப்படுத்துகிறார்கள். எனவே கால தாமதப்படுத்தாமல், சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று விவசாயிகள் விபத்தில் இறந்து விட்டால், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்று கூறினார்.

விவசாயி மாணிக்கம் பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விவசாய கிணறுகள் வெட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். குரங்கு, மான், மயில், பன்றி ஆகிய விலங்குகள் மூலம் விவசாய பயிர் அதிக அளவு சேதமடைகின்றன. பன்றி நாள் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. மற்ற விலங்குகளை எதுவும் செய்ய முடியாது. எனவே விவசாய பயிர்களை சேதப் படுத்தும் பன்றிகளை துப்பாக்கியால் சுட அனுமதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் சாந்தா பேசுகையில், விவசாயத்துறை அலுவலர்கள், கிணறு வெட்ட 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு விவசாயி ஏற்கனவே வேறு ஒரு கிணறு வெட்டி இருக்கக்கூடாது. மேலும் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட நிதி 65 சதவீதத்தை விவசாயத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிணறு வெட்டவும், சின்ன வெங்காயம் சுத்தம் செய்ய கொட்டகை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது, என்றார்.

விவசாயி சக்திவேல் பேசுகையில், வெட்டப்பட்ட கரும்புக்கு இன்னும் உரிய பணம் வழங்கவில்லை. எனவே கரும்பு விவசாயிகளுக்கு விரைந்து உரிய பணம் வழங்க வேண்டும், என்றார்.

விவசாயி ராமலிங்கம் பேசும்போது, டுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு அமைக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க வேண்டும், என்று கூறினார். விவசாயி வரதராஜன் பேசும்போது, சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் விரைந்து வழங்க வேண்டும். பூலாம்பாடியில் அமைய உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டிட பணியை தொடங்க வேண்டும். அருகம்பாளையம், பூலாம்பாடி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ள பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், என்று கூறினார்.

இதே போன்று கூட்டத்தில் விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார். அதற்கு பதில் அளித்த கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.

முன்னதாக கூட்டம் தொடங்கியதும், கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் எழுந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசியல் கட்சி யினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நடத்திய மாணவர்களை மட்டும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை கண்டிக்கிறோம். மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது எந்த வித நிபந்தனையும் இன்றி வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று கூறி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இந்த கோரிக்கையை மனுவாக எழுதி வேளாண்மை துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Next Story