அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 April 2018 10:15 PM GMT (Updated: 20 April 2018 8:31 PM GMT)

அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவினாசி,

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இதனால் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தினமும் முற்றுகையிடுவதும், சாலைமறியல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அவினாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையம், பழைய அம்பாள் காலனி, ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 25 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 2 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் கடும் வறட்சி காரணமாக இப்பகுதி பொதுமக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் பல முறை நேரில் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் கிராமத்துக்கு முறையாக தினமும் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெரியாயிபாளையத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் நேற்று காலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், அந்த கிராமத்துக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story